Friday, June 26, 2009

நாய் வித்த காசு

“என்ன பாபு! மூணு நாளா கடைய திறக்காம எங்கே போய்ட்ட?”

“ஒண்ணுமில்ல சார். ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்.”

“ஆஸ்பத்திரிக்கா? உடம்பு கிடம்பு சரியில்லையா?”

“அத விடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்? வழக்கம் போல கோல்டு பிளேக் தானே?”

“எத்தனை வருஷமா உன் கடைக்கு வர்ரேன்? உன் மேல அக்கறை இல்லாமலா கேக்கறேன்.உன் உடம்புக்கு என்னனு முதல்ல சொல்லு”

“சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் சார்.உங்களுக்கு தெரிஞ்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை.எல்லாம் முடிஞ்சு போச்சு”

“என்னப்பா இப்படி எல்லாம் பேசுற? அப்படி என்னதான் உடம்புக்கு”

“ஏதோ புத்து நோயாம்? இன்னும் ஆறு மாசந்தான்னு டாக்டர் டைம் கொடுத்துட்டார்”

“என்னது? உனக்கு புத்து நோயா? பெட்டிக்கடை பூரா சிகரெட் வச்சு வித்தாலும் உனக்கு தம் அடிக்கிற் பழக்கம்
கிடையாதே? உனக்கு எப்படி இது?”

”அததான் நானும் டாக்டர்கிட்டே கேட்டேன்.அவரு என் தொழில் என்னனு கேட்டாரு. சொன்னேன்.அவரு சொன்னதை கேட்டா உங்களால் நம்ப முடியாது”

“அப்படி என்ன சொன்னார்?”

“தம் அடிக்கிறதனால மட்டும் இந்த வியாதி வராதாம்.தம் அடிக்கிறவங்க கூட ரொம்ப நேரம் இருந்தாலும் இந்த வியாதி வருமாம்”

“நீதான் தம் அடிக்கிறவங்க கூடவே சேர மாட்டியே?கடையே கதினு இருக்கற ஆளாச்சே?”

“என்ன சார் சொல்றீங்க?என் கடையில தம் வாங்கறவங்க வீட்டுக்கு கொண்டு போயா அடிக்கிறாங்க? வாங்கின கையோட கடைக்கு முன்னாடிதானெ அடிக்கிறாங்க.அவ்வளவு புகையும் எம்மேலதான”

“நீ சொல்றதும் சரிதான். உன் கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்ல”

“நாய் வித்த காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனா குரைச்சுருச்சு.என் ஆயுசையும் குறைச்சுருச்சு”


0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin