Friday, June 26, 2009

நாய் வித்த காசு

“என்ன பாபு! மூணு நாளா கடைய திறக்காம எங்கே போய்ட்ட?”

“ஒண்ணுமில்ல சார். ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்.”

“ஆஸ்பத்திரிக்கா? உடம்பு கிடம்பு சரியில்லையா?”

“அத விடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்? வழக்கம் போல கோல்டு பிளேக் தானே?”

“எத்தனை வருஷமா உன் கடைக்கு வர்ரேன்? உன் மேல அக்கறை இல்லாமலா கேக்கறேன்.உன் உடம்புக்கு என்னனு முதல்ல சொல்லு”

“சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் சார்.உங்களுக்கு தெரிஞ்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை.எல்லாம் முடிஞ்சு போச்சு”

“என்னப்பா இப்படி எல்லாம் பேசுற? அப்படி என்னதான் உடம்புக்கு”

“ஏதோ புத்து நோயாம்? இன்னும் ஆறு மாசந்தான்னு டாக்டர் டைம் கொடுத்துட்டார்”

“என்னது? உனக்கு புத்து நோயா? பெட்டிக்கடை பூரா சிகரெட் வச்சு வித்தாலும் உனக்கு தம் அடிக்கிற் பழக்கம்
கிடையாதே? உனக்கு எப்படி இது?”

”அததான் நானும் டாக்டர்கிட்டே கேட்டேன்.அவரு என் தொழில் என்னனு கேட்டாரு. சொன்னேன்.அவரு சொன்னதை கேட்டா உங்களால் நம்ப முடியாது”

“அப்படி என்ன சொன்னார்?”

“தம் அடிக்கிறதனால மட்டும் இந்த வியாதி வராதாம்.தம் அடிக்கிறவங்க கூட ரொம்ப நேரம் இருந்தாலும் இந்த வியாதி வருமாம்”

“நீதான் தம் அடிக்கிறவங்க கூடவே சேர மாட்டியே?கடையே கதினு இருக்கற ஆளாச்சே?”

“என்ன சார் சொல்றீங்க?என் கடையில தம் வாங்கறவங்க வீட்டுக்கு கொண்டு போயா அடிக்கிறாங்க? வாங்கின கையோட கடைக்கு முன்னாடிதானெ அடிக்கிறாங்க.அவ்வளவு புகையும் எம்மேலதான”

“நீ சொல்றதும் சரிதான். உன் கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்ல”

“நாய் வித்த காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனா குரைச்சுருச்சு.என் ஆயுசையும் குறைச்சுருச்சு”


Friday, June 19, 2009

’இ’ராமர்

”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்”,கரட்டாண்டி.


“என்ன உண்மை தெரிஞ்சாகனும்? நீ மனுசனா இல்லையானா? இல்லைன்னு ஊருக்கே தெரியுமே”,கட்டையன்.


“நான் மனுசன் இல்லை. தெய்வம்னு எனக்குத் தெரியுமே”,கரட்டாண்டி.


“இப்படியே பேசிட்டு இருந்தேனா ஒரு நாள் உன்னைய பொணமாக்கிட்டு உன் போட்டோவுக்கு மாலை போட்டு தெய்வமாக்க போறாங்க”,கட்டையன்.

“சரி அதை விடு. ராமரோட அப்பா பேரு என்னான்னு சொல்லு”,கரட்டாண்டி.

“இதெல்லாம் ஒரு கேள்வியா? தசரதன்னு சின்ன பிள்ளையக் கேட்டாக்கூட சொல்லும்”,கட்டையன்.

“அது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.உன்னை மாதிரி வளந்த கிடாவுக்கும் தெரியும். ராம்ரோட அப்பா பேரு தசரதன்னா ‘த’ராமர்ன்னுல எழுதனும்.ஏன் ‘இ’ராமர்ன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘இவன்கிட்ட ஒழுங்கா பதில் சொன்னா அடுத்து எடக்கு மடக்கா இன்னொரு கேள்வி கேட்பான்.இவனுக்கு வேற மாதிரிதான் பதில் சொல்லனும்’.“அது இந்த U.S போய்ட்டு வந்தவங்க U.S ரிட்டன்னு போட்டுக்கறது இல்லையா? அந்த மாதிரிதான் இதுவும்”,கட்டையன்.

“புரியலையே”,கரட்டாண்டி.

“ராமர் இலங்கைக்கு போய் சீதையை காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததால இலங்கை ரிட்டன் ராமர்.அதைதான் சுருக்கி ‘இ’ராமருன்னு எழுதறாங்க”,கட்டையன்.

“ஓ! அதுதான் லட்சுமணனைக் கூட ‘இ’லட்சுமணன்னு எழுதறாங்களா?”,கரட்டாண்டி.

“சரியா புரிஞ்சுக்கிட்டியே”,சிரித்துக் கொண்டே கட்டையன்.

“சரி. அப்புறம் ஏன் ராவணனையும் ‘இ’ராவணன்னு எழுதுறாங்க?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘ஆரம்பிச்சுட்டாண்டா’. “ம்ம். அது வந்து...”,கட்டையன்.

“மாட்டிக்கிட்டியா? இழுக்காம பதிலை சொல்லுடா”,கரட்டாண்டி.

“அங்.சீதாவைக் கடத்துறதுக்காக ராவணன் இந்தியாவுக்கு வந்துட்டுப் போனான்ல.அதனால இந்தியா ரிட்டன் ராவணன். ‘இ’ராவணன்னு எழுதுறாங்க.எப்பூடி?”,கட்டையன்.

“நீ சொல்றது எல்லாம் சரின்னா சீதாவை மட்டும் ஏன் சீதான்னு எழுதுறாங்க. ‘இ’சீதான்னுல எழுதனும்? எப்பூடி?”,கரட்டாண்டி.

கட்டையன் மனசுக்குள் ‘விடமாட்டேங்கறானே’. “ராமர் இந்தியாவுல இருந்துக்கிட்டே உண்ணாவிரதம் இருந்தோ,பந்த் நடத்தியோ இல்லை ரெண்டு மூணு பேர் தீக்குளிச்சோ போராட்டம் பண்ணி அதனால ஒருவேளை ராவணன் மனசு மாறி சீதாவை அவனே கொண்டு வந்து விட்டுருந்தா இலங்கை ரிட்டன் சீதா ‘இ’சீதான்னு எழுதிருபாங்க.ஆனா ராமர் இலங்கைக்கு போய் போர் செஞ்சுல மீட்டுட்டு வந்தார்.சீதாவுக்கு ராமர் இருக்குமிடந்தான் அயோத்தின்னு சொல்லுவாங்கள.சீதாவை ராவணன் கடத்திட்டு போனப்போ அது சீதாவுக்கு இலங்கை.போருக்காக ராமர் இலங்கை வந்ததும் அது சீதாவுக்கு அயோத்தி ஆயிருச்சு.அதனால ‘இ’சீதான்னு எழுதிறதில்லை”,கட்டையன். மனசுக்குள் ‘ஸ்ஸ்ஸ்.இப்பவே கண்ணை கட்டுதே’.

“அப்ப ...”,கரட்டாண்டி.

“டேய் நிறுத்துடா!.நீதான் கேனைனா இதை படிக்கிறவனும் கேனையா?பாவம்டா அவங்க. விட்டுடுடா”,கட்டையன்.

Wednesday, June 10, 2009

விழி வலி

என் விழிகளை
கண்டால் உனக்கு
எதுவும் வரவில்லையா
என்றாய்!

விடியவிடிய உன்
விழிகளில் விழித்ததில்
எனக்கும் வந்தது
விழி வலி மட்டுமே!

Monday, June 8, 2009

காசி - ராமேஸ்வரம் பேக்கேஜ்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.ஏதாவது ஒரு அவள் நோக்கினால் அவளுடன் அனல் பறக்க அளவளாவ வாங்கிய அலைபேசி அலறியது.ஒரு அனாவசிய அழைப்பு வழக்கம்போல்.

”ஹலோ சார் நாங்க பரலோகம் ட்ராவல்ஸ்லிருந்து பேசுறோம்”.

“நான் எதுவும் டிக்கெட் புக் பண்ணலையே”.

“அது இல்லை சார். எங்க ட்ராவ்ல்ஸ்ல புதுசா ஒரு திட்டம் அறிவிச்சிருக்கோம்.Honeymoon Hillsனு இந்தியாவுல இருக்குற எந்த ஒரு ஹில் ஸ்டேஸ்ஷ்னுக்கும் 10,000 ரூபாய் மட்டுந்தான் சார்”

“அதெல்லாம் கல்யாணமான புது ஜோடிங்களுக்கு கால் பண்ணி சொல்லுங்க.எனக்கு எதுக்கு கால் பண்றீங்க?”

“உங்களுக்கு கல்யாணம் ஆகலையா? பரவாயில்லை சார். உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் ரெஃபர் பண்ணுங்க.காசி-ராமேஸ்வரம் பேக்கேஜ் ஃப்ரீயா கிடைக்கும்”

“ஓ அப்படியா? எங்க அப்ப அம்மா கூட காசிக்கு போகனும் ரொம்ப நாளா சொல்லிகிட்டுருந்தாங்க.அந்த பேக்கேஜுக்கு எவ்வுளவு சார்ஜ் பண்ணுறீங்க?”

“இல்லை சார் அது இலவச பேக்கேஜ்.அதை தனியா நாங்க கொடுக்கறது இல்லை.”

“கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்”

”லைன்ல இருங்க சார். கேட்கிறேன்”

சிறிது நேரம் கழித்து “சார் நீங்க வேற ஏதாவது டிக்கெட் எங்க ட்ராவல்ஸ்ல புக் பண்ணீங்கன்னா காசி ராமேஸ்வரம் பேக்கேஞ் கம்மியான ரேட்ல கொடுக்கலாமுனு மேனேஜர் சொல்றார்”

”சரி.காசிக்கு அப்புறம் ராமேஸ்வரமா,இல்லை ராமேஸ்வரத்துக்கு அப்புறம் காசியா?”

“அது உங்க இஷ்டம் சார். நாங்க பேக்கேஜ் கொடுத்துடுவோம். எது முதல்ல பாக்கறதுனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.”

“என்னைக்கு வண்டி கிளம்புது?”

“எதுக்கு சார்?”

“காசிக்கு எப்ப வண்டி கிளம்புது?”

“நாங்க வண்டிலாம் அனுப்ப மாட்டோம் சார்.நீங்களே பஸ்லயோ ஆட்டோலயோ வந்துருங்க.”

“என்னது ஆட்டோலயா? காசி வரைக்கும் ஆட்டோலயா போகனும்?”

“காசிக்கெல்லாம் போக வேண்டாம் சார்.வீட்டுலையே பாக்க்லாம்.”

“வீட்டுலேயவா?எனக்கு ஒண்ணும் புரியலை”

“ஆமாம் சார்.காசி ராமேஸ்வரம் ரெண்டையும் அழகா பேக் பண்ணி ஒரே பேக்கேஜா கொடுத்துடுவோம்.நீங்க வீட்டுக்கு கொண்டு போய் பிரிச்சு பாத்துக்கலாம்.”

“நீங்க என்ன சொல்றீங்க? காசியயையும் ராமேஸ்வரத்தையும் பேக் பண்ணி கொடுப்பீங்களா?”

“பேக் பண்ணி கொடுக்கறதுனலா அது திருட்டு டிவிடியா இருக்குமோனு பயபடுறீங்களா? ரெண்டும் ஒரிஜினல் டிவிடி சார்”

“என்னது டிவிடியா? காசி ராமேஸ்வரம்னு சொன்னீங்க?”

“ஆமாம். விக்ரம் நடிச்ச காசி பட டிவிடியும் ஜீவா நடிச்ச ராமேஸ்வர பட டிவிடியும் பேக் பண்ணி தரதுதான் காசி ராமேஸ்வரம் பேக்கேஜ்.உங்களுக்கு எந்த ஊருக்கு டிக்கெட் புக் பண்ணனும் சார்?”

டொக்.
Blog Widget by LinkWithin